Friday 29 December 2017

05. மதிப்பு விதி

"உற்பத்தியை ஏற்பாடு செய்யும் முதலாளிகள் பெரும்பாலும் ஒருவரோடு ஒருவர் தொடர்பின்றி தம் விருப்பப்படி இயங்குகின்றனர். எனவே ஒரே விதமான பண்டங்களின் உற்பத்தியில் எவ்வளவு நிறுவனங்கள் ஈடுபட்டிருக்கும், ஒராண்டு, இரண்டாண்டு கழித்து எவ்வளவு பண்டங்கள் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும், பணடங்கள் எந்த அளவிற்கு சந்தையில் குவிக்கப்பட்டிருக்கும், பொதுமக்களால் எவ்வளவு வாங்க இயலும் என்பதெல்லாம் ஒருவருக்கும் முன்கூட்டியே சரிவரத் தெரியாது. இது தன்னிச்சையான வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும், உற்பத்தியின் அராஜகத் தன்மையை, மொத்தமாக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் ஒழுங்கின்மையை, திட்டமின்மையைத் தோற்றுவிக்கும். தனது நிறுவனத்தில் முழு அதிகாரமுள்ள எஜமானனாக இருக்கும் முதலாளி, முதலாளித்துவத்தின் பொருளாதார விதிகள் தன்னிச்சையாகச் செயல்படக் கூடிய சந்தையின் அடிமையாக இருக்கிறான்.

போட்டி- உற்பத்தி மற்றும் விற்பனைக்கு அதிக சாதகமான சூழ்நிலைகளுக்காகவும் அதிக லாபத்தை அடைவதற்காகவும் முதலாளிகள் மத்தியில் நடைபெறும் கடுமையான போராட்டம் உற்பத்தியின் அராஜகத் தன்மையோடு பிரிக்க முடியாதபடி தொடர்புடையது. சமுதாயத்திற்கு மிக அணுகூலமான முறையில் உடைமையாளர்கள் தமது சாதனங்களைப் பயன்படுத்தும்படி அவர்களே முதலாளித்துவ உலகில் யாராலும் கட்டாயப்படுத்த இயலாது.

இத்தகைய உற்பத்தியால் எப்படி தொடர்ந்து நிலவ இயலும், இது எப்படி வளர்ச்சியுறும்?

முதலாளித்துவ உற்பத்தியைத் தன்னிச்சையாக ஒழுங்கு படுத்தக் கூடிய விதியாக மதிப்பு விதி விளங்குகிறது.

மதிப்பு விதியின்படி பண்டங்களின் உற்பத்திக்காகச் செலவிடப்பட்ட சமுதாயரீதியாக அவசியமான உழைப்பின் அளவிற்கேற்ப பண்டங்களின் பரிவர்த்தனை நடைபெறுகிறது. பண்டத்திற்காக அளிக்கப்படும் விலை அதன் மதிப்பிற்கு ஏற்றதாயிருக்க வேண்டும். ஆனால் சந்தையில் விலைகள் தேவை மற்றும் சப்ளையின் தாக்கத்திற்கேற்ப தன்னிச்சையாக உருவாகின்றன. தேவையைவிட சப்ளை அதிகமாயிருந்தால் பண்டத்தின் விலை மதிப்பைவிடக் குறைகிறது. தேவையைவிட சப்ளை குறைவாயிருந்தால் விலை மதிப்பைவிட அதிகமாகும். தேவையும் சப்ளேயும் சமமாயிருந்தால் விலையும் மதிப்பும் ஒன்றாயிருக்கும். விலைகளின் ஊசலாட்டத் தாக்கத்தால் முதலாளிகள் தமது மூலதனங்களைப் பண்டங்களின் விலைகள் அவற்றின் மதிப்பைவிடக் குறைவாயுள்ள துறைகளிலிருந்து இவை மதிப்பைவிட அதிகமாயுள்ள துறைகளுக்கு மாற்றுகின்றனர்.
...
மதிப்பைச் சுற்றிய விலைகளின் தன்னிச்சையான ஊச லாட்டம்தான் முதலாளித்துவ பண்ட உற்பத்தியின் ஒரே சாத்தியமான சீர்படுத்தும் முறையாகும். குறிப்பிட்ட ஒரு துறையில் உற்பத்தியை ஒரளவு லாபகரமானதாக ஆக்கிய விலைகளின் ஊசலாட்டங்கள் உற்பத்தியளவை விரிவாக்குவதை அல்லது குறைப்பதை நிர்ணயிக்கின்றன. முதலாளித்துவத்தில் பண்டங்களின் பரிவர்த்தனையையும் உற்பத்திச் சாதனங்கள் மற்றும் உழைப்பைப் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளுக்கிடையில் வினியோகிப்பதையும் சீர்படுத்தக்கூடிய மதிப்பு விதியின் சாரம் இதுதான்.

சந்தை விலைகளின் ஊசலாட்டம், தேவை மற்றும் சப்ளையின் மாற்றங்கள் உற்பத்தியாளர்களிடம் சமமின்மையைத் தோற்றுவிக்கின்றன, ஒரு சிலரைத் திவாலாக்கி மறு சிலரைச் செல்வந்தர்களாக்குகின்றன -இதுதான் மதிப்பு விதியின் செயல்பாட்டின் தவிர்க்க இயலாத விளைவாகும். தமது நிறுவனத்தில் உழைப்பின் உற்பத்தித் திறனை அதிகப்படுத்தி உற்பத்தியின் தொழில்நுட்பத் தரத்தை மேம்படுத்த இயலும் ஆலை முதலாளிகளால் மட்டுமே முதலாளித்துவப் போட்டியில் நிலைத்து நிற்கவும் திவாலாகிப் போவதைத் தவிர்க்கவும் இயலும்.
...
போட்டிப் போராட்டம் ஒரளவிற்கு புதிய தொழில் நுட்பத்தைப் புகுத்துவதையும் உற்பத்தியை நவீனப்படுத்துவதையும் ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில் போட்டியும் உற்பத்தியின் அராஜகத் தன்மையும் உற்பத்திச் சக்திகளை அழிக்கின்றன, உழைப்பாளிகளுக்குக் கணக்கிலடங்கா இன்னல்களை உண்டாக்குகின்றன. மூலதனம் உழைப்பைச் சுரண்டும் முறையை அறிவதன் மூலம் இது எப்படி நடைபெறுகிறது என்று புரிந்து கொள்ளலாம்."

(“சமூக விஞ்ஞானம்” முன்னேற்றப் பதிப்பகம் – மாஸ்கோ- 1985)

No comments:

Post a Comment