Friday 29 December 2017

03. பண்டத்தின் பண்புகள்

உபயோக மதிப்பு:-

"பண்டம் என்பது பரிவர்த்தனைக்காக உற்பத்தி செய்யப்பட்ட உழைப்பின் விளைபொருளாகும். இது ஏதாது மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது தெளிவு, இல்லாவிடில் இதை யாரும் வாங்கமாட்டார்கள். பொருளின் பயன்தன்மை, மக்களின் ஏதாவதொரு தேவையைப் பூர்த்தி செய்யும் குணம் உபயோக மதிப்பு என்றழைக்கப்படுகிறது.

ரொட்டி, சர்க்கரை, வெண்ணெய், பால், இறைச்சி ஆகியவை மனிதர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்கின்றன என்பதில் தான் இவற்றின் உபயோக மதிப்பு (பயன் மதிப்பு) அடங்கியுள்ளது.
உபயோக மதிப்புகள் என்பதே பொருட்கள், பொருளாயத நலன்கள் ஆகும். எந்த ஒரு சமுதாயத்திலும் இவை செல்வத்தின் பொருட் சாரத்தை உருவாக்குகின்றன. ஆனால் பண்டத்தின் உபயோக மதிப்பு, இயற்கைப் பொருளாதாரத்தில் விளைபொருளின் உபயோக மதிப்பிலிருந்து மாறுபடுகிறது. இயற்கைப் பொருளாதாரத்தில் விளைபொருட்கள் உற்பத்தியாளர்களைப் பொறுத்த மட்டில்தான் உபயோக மதிப்பைப் பெற்றுள்ளன, பண்டங்களுக்குச் சமுதாய உபயோக மதிப்பு, அதாவது சமுதாயத்தின் மற்ற உறுப்பின்ர்களுக்கான உபயோக மதிப்புதான் உள்ளது. செருப்பு தைப்பவன் தனக்காக இல்லாமல் மற்றவர்களுக்காகச் செருப்புக்களை உற்பத்தி செய்கிறான்.

பரிவர்த்தனை மதிப்பு;-

பண்டங்களை மக்கள் வாங்கினால் இவற்றை அவர்கள் பயன்படுத்தலாம். ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொண்டு ஒரு குளிர்பதன பெட்டி அல்லது நான்கு ஆண்டுகளுக்கான கோட்டுகள் அல்லது மூன்று தையல் இயந்திரங்களை வாங்கலாம். இது எதைக் குறிக்கிறது? அதாவது முற்றிலும் வெவ்வேறான பண்டங்களில், குறிப்பிட்ட ஒரு விகிதத்தில் இவற்றை ஒன்றுடன் ஒன்று ஒப்பிடவல்ல எதோ ஒரு பொது அம்சம் உள்ளது என்பதைக் குறிக்கிறது. இந்தப் பொது அம்சம் பௌதீக, இரசாயன அல்லது வேறு எதோ இயற்கைக் குணங்கள் அல்ல. இவையனைத்தும் மனித உழைப்பின் விளைபொருட்கள் என்பதுதான் பொது அம்சமாகும். இதுதான் இவற்றை ஒப்பிடத்தக்கவையாக்குகிறது.

பண்டங்களை ஒன்றுடன் ஒன்று ஒப்பிடுகையில் மக்கள் உண்மையில் அவற்றில் உள்ள உழைப்பை ஒப்பிடுகின்றனர். பண்டங்களில் அடங்கியுள்ள உழைப்பு பண்டத்தின் மதிப்பை (பரிவர்த்தனை மதிப்பு) உருவாக்குகிறது.

சமுதாய ரீதியாக அவசியமான வேலை நேரம்:-

பண்ட உற்பத்தியாளர்கள் ஒரே மாதிரியான நிலைமைகளில் வேலை செய்வதில்லை. வெவ்வேறு உழைப்புக் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். சமமற்ற திறமைகளைக் கொண்டுள்ளனர், இவர்கள் ஒரே விதமான பண்டங்களின் உற்பத்திக்கு வெவ்வேறு அளவு நேரங்களைச் செலவிடுகின்றனர். ஆனால் சந்தையில் ஒரே விதமான பண்டங்களுக்கு ஒரே மாதிப்புதான் உள்ளது. எனவே பண்ட மதிப்பின் அளவு உற்பத்தி மற்றும் உற்பத்தியாளனின் தனிப்பட்ட சிறப்பியல்புகளைப் பொறுத்திருப்பதில்லை. இது மேலோங்கி நிற்கக் கூடிய உழைப்பு நிலைமைகளாலும் சமுதாய ரீதியாக அவசிமான வேலை நேரத்தாலும் நிர்ணயிக்கப்படுகிறது.

காலணிகளை உற்பத்தி செய்யும் மூன்று பண்ட உற்பத்தியாளர் பிரிவுகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு சிலர் 7 நிமிடங்களிலும் அடுத்தவர்கள் 10 நிமிடங்களிலும் மூன்றாமவர்கள் 14 நிமிடங்களிலும் ஒரு ஜோடி செருருப்புகளைத் தைக்கின்றனர். இதில முதலாவது மற்றும் மூன்றாவது பிரிவுகள் சிறியவை, சிறிதளவு காலணிகளைத் தான் இப்பிரிவுகள் உற்பத்தி செய்து சந்தைக்கு அன்புகின்றன. இரண்டாவது பிரிவுதான் பெரும்பாலான காலணிகளை உற்பத்தி செய்கிறது.

சமுதாய ரீதியாக அவசியமான நேரம் எது?

இரண்டாவது பிரிவு செலவழிக்கும் 10 நிமிடம்தான் இந்த நேரம். ஏனெனில் சமுதாய ரீதியாக அவசியமான நேரம், குறிப்பிட்ட துறையில் பெரும்பான்மை பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் வேலை நேரத்தோடு ஒத்துப் போகிறது அல்லது நெருக்கமாயுள்ளது.

இப்போது நம்மால மதிப்பு என்ற கருதுகோளை வரையறுக்க இயலும். மதிப்பு என்பது பண்டத்தின் உற்பத்திக்காக செலவிடப்பட்ட சமுதாய ரீதியாக அவசியமான உழைப்பு ஆகும்.

மதிப்பு என்பது பண்ட உற்பத்திக்கு மட்டுமே உரிய ஒரு வரலாற்றுப் புலப்பாடு ஆகும். எங்கெல்லாம் எப்போதெல்லாம் உழைப்பின் விளைபொருட்கள் பண்டங்களாக விளங்குகின்றனவோ, பரஸ்பரம் பரிவர்த்தனை செய்து கொள்ளப்படுகிறதோ அங்கெல்லாம் மதிப்பு நிலவுகிறது.

இயற்கைப் பொருளாதாரச் சூழநிலைகளில் – இதன் விளைபொருட்கள் சந்தைக்கு வருவதில்லை – மதிப்புக்குச் சமுதாய அவசியம் இல்லை. கம்யூனிசச் சமுதாயத்தின் உயர் கட்டத்திலும் இது இருக்காது. ஏனெனில் அப்போது பண்ட உற்பத்தி உதிர்ந்து விடும். எனவே மதிப்பு பொருட்களின் குணமல்ல, இது பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடிய மனிதர்களுக்கு இடையேயான சமுதாய உறவுகளைக் குறிக்கிறது."

(“சமூக விஞ்ஞானம்” முன்னேற்றப் பதிப்பகம் – மாஸ்கோ- 1985)

No comments:

Post a Comment